பள்ளிபாளையத்தில் சோகம்: 1½ வயது குழந்தையுடன் என்ஜினீயர் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை

பள்ளிபாளையத்தில் 1½ வயது குழந்தையுடன் என்ஜினீயர் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-24 00:59 GMT
பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள அக்ரஹாரம் எஸ்.எஸ்.ஆர். காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 32). என்ஜினீயர். இவருடைய மனைவி ரம்யா (27). இவர்களுடைய மகன் இனியவன் (1½). 
சுரேஷ்குமார் துபாயில் வேலைப் பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தபோது விபத்து ஒன்றில் அவர் சிக்கினார். இதில் அவருடைய முதுகு தண்டுவட பகுதியில் காயம் ஏற்பட்டு கடந்த 1½ ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் கடந்த ஒரு மாத காலமாக சரியாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்தாராம். இந்தநிலையில் நேற்று காலை தனது மகன் இனியவனை மோட்டார்சைக்கிளில் அமர வைத்து கொண்டு பள்ளிபாளையம் வந்தார். 

பின்னர் அவர் அங்குள்ள காவிரி ஆற்று பாலத்தில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தினார். இதையடுத்து மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கிய அவர் மகன் இனியவனை தூக்கி கொண்டு பாலத்தில் இருந்து திடீரென ஆற்றில் குதித்தார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி தந்தை, மகன் இறந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பரிசல் ஓட்டிகள் உதவியுடன் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி சுரேஷ்குமார் மற்றும் இனியவன் ஆகியோரது உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த தற்கொலை சம்பவம் குறித்து சுரேஷ்குமாரின் மனைவி ரம்யா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதுகு தண்டுவட பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த என்ஜினீயர் தனது 1½ வயது குழந்தையுடன் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்