கொரோனா அதிகரிப்பால் நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

கொரோனா அதிகரிப்பால் நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

Update: 2021-03-23 23:52 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரியில் தற்போது தினமும் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று உறுதியாகிறது. 

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் நடமாடும் வாகனம் மூலம் ஆரம்ப சுகாதார நிலையத்தினர் சென்று அங்கு வசிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவார்கள்.

 நீலகிரியில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) ஒரே நாளில் 3,700 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

கேரளா, கர்நாடகா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வாரவிடுமுறை நாட்களில் அதிகம் பேர் வருகின்றனர். அவர்கள் இ-பாஸ் நடைமுறை மூலம் அனுமதிக்கப்படுகின்றனர்.

 பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களை கண்காணித்து அபராதம் விதிக்க மாவட்டம் முழுவதும் 70 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 

கொரோனா பரவல் உள்ள பகுதிகளில் வீடு, வீடாக கிருமிநாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் நகராட்சி சார்பில் அரசு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்