சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 164 வழக்குகள் பதிவு

சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

Update: 2021-03-23 23:32 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் 
தமிழகத்தில் சட்டசபை பொதுத்தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளிலும் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அதிகாரிகள் துணை ராணுவம் மற்றும் போலீசாருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஓய்வுபெற்ற போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
164 வழக்குகள் பதிவு
இதற்கான பணியில் தேர்தல் பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சேலம் மாநகரில் இதுவரை 35 வழக்குகளும், புறநகரில் 129 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும் போது, ‘சட்டசபை தேர்தலையொட்டி தற்போது நடத்தை விதிகள் அமலில் உள்ளன. குறிப்பாக பிரசாரத்தின் போது அல்லது வேறு காரணங்களால் தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 164 வழக்குகளை பதிவு செய்துள்ளோம்’ என்றார்கள்.

மேலும் செய்திகள்