ஈரோட்டில் தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பலூன் பொது பார்வையாளர்கள் பறக்கவிட்டனர்

ஈரோட்டில் தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பலூனை பொது பார்வையாளர்கள் பறக்கவிட்டனர்.

Update: 2021-03-23 22:43 GMT
ஈரோடு
ஈரோட்டில் தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பலூனை பொது பார்வையாளர்கள் பறக்கவிட்டனர்.
ராட்சத பலூன்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் ஓட்டு போடுவதற்காக பல்வேறு கட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தேர்தல் பொது பார்வையாளர்கள் பிரசாந்த் குமார் மிஷ்ரா, அருப் சாட்டர்ஜி, சஞ்சீவ்குமார் தேவ் ஆகியோர் கலந்துகொண்டு ராட்சத பலூனை பறக்கவிட்டனர்.
எஸ்.கே.எம். நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்ட அந்த ராட்சத பலூனில், வாக்களிப்பது நமது கடமை, தவறாமல் வாக்களிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த பலூன் தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் மேல் பகுதியில் பறக்க விடப்பட்டு உள்ளது.
விழிப்புணர்வு கோலம்
இதேபோல் தனியார் சார்பில் உணவுகளை வினியோகம் செய்யும் வாகனங்கள், எண்ணெய் பாட்டில்கள், குடிநீர் கேன்கள், மசாலா பாக்கெட்டுகளில் தேர்தல் தேதியுடன் கூடிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் வரைந்த வாக்காளர் விழிப்புணர்வு கோலத்தை கலெக்டர் கதிரவன் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர்கள் பார்வையிட்டனர். அப்போது மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் கும்மி பாட்டு பாடி தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கேக் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு தொப்பி, முக கவசங்கள், துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாலாஜி (பொது), ஈஸ்வரன் (கணக்குகள்), எஸ்.கே.எம். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்