தேர்தல் பறக்கும் படையினரை கண்டித்து துறையூரில் கடையடைப்பு-சாலை மறியல்
துறையூரில் ஆவணத்தை காண்பித்தும் வியாபாரியிடம் ரூ.92 ஆயிரத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினரை கண்டித்து துறையூர் பஸ்நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு செய்து, சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துறையூர்,
துறையூரில் ஆவணத்தை காண்பித்தும் வியாபாரியிடம் ரூ.92 ஆயிரத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினரை கண்டித்து துறையூர் பஸ்நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு செய்து, சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மளிகை வியாபாரி
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த சிறுநாவலூரை சேர்ந்தவர் மளிகை வியாபாரி செல்வகுமார். இவர் துறையூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மளிகை கடைகளில் சாமான்களை கொடுத்துவிட்டு, அதற்கான பணத்தை வசூல் செய்து வருவது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம் போல், பணத்தை வசூல் செய்து கொண்டு ரூ.92 ஆயிரத்துடன் வந்து கொண்டிருந்தார். செட்டிகுளம் அருகே வந்த போது, தேர்தல் பறக்கும் படையினர் அவரை வழிமறித்து சோதனை செய்தனர். அவர், அதற்கான ஆவணங்களை காட்டியும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் பணத்தை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
கடையடைப்பு- சாலை மறியல்
இதனால் பறக்கும்படை அதிகாரிகளை கண்டித்து, துறையூர் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் காமராஜ் தலைமையில் துறையூரில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலும், துறையூர் பஸ்நிலையத்தில் வியாபாரிகள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
அப்போது, உரிய ஆவணங்கள் எது என்பதை விளக்கிக் கூறியும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார், துணை தாசில்தார் ஜாபர் சாதிக் அனைத்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
பின்னர் வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்று தாலுகா அலுவலகத்தில் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தனர். இதனால் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் பஸ்கள், திருச்சியில் இருந்து துறையூர் வரும் பஸ்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டன.
இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டதுடன், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.