நள்ளிரவில் படகில் இருந்த என்ஜின் திருட்டு
கன்னியாகுமரி அருகே நள்ளிரவில் காரில் வந்து படகில் இருந்த என்ஜினை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி ேதடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி அருகே நள்ளிரவில் காரில் வந்து படகில் இருந்த என்ஜினை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி ேதடி வருகிறார்கள்.
படகில் என்ஜின் திருட்டு
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் சிங்காரவேலன் காலனியை சேர்ந்தவர் மர்லிஸ்மேபின் ஆன்றோ (வயது32), மீனவர். இவர் தனக்கு சொந்தமான படகை சின்னமுட்டம் படகு கட்டும் தளம் அருகே கடற்கரையில் நிறுத்தி வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்று திரும்பிய மர்லிஸ்மேபின் ஆன்றோ, படகை கடற்கரையில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை மீன்பிடிக்க செல்வதற்காக கடற்கரைக்கு சென்றார். அப்போது, அங்கு நிறுத்ததப்பட்டிருந்த படகில் இருந்த என்ஜின் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
காரில் வந்து கைவரிசை
இதுபற்றி நள்ளிரவில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களிடம் விசாரித்தபோது, வெள்ளை நிற காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் படகு இருந்த பகுதிக்கு வந்து விட்டு திரும்பிச் சென்றதாக கூறினர். திருடப்பட்ட படகு என்ஜின் ரூ.1½ லட்சம் மதிப்பு என்று கூறப்படுகிறது.
பின்னர், இதுகுறித்து மர்லிஸ்மேபின் ஆன்றோ கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து படகில் என்ஜினை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.