தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் மாற்றுத்திறனாளிக்கு தங்கம்

தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் மாற்றுத்திறனாளி தங்கம் வென்றார்.

Update: 2021-03-23 19:02 GMT
ஊட்டி,

இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி சார்பில், தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்கும் போட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூரு விளையாட்டு மைதானத்தில் கடந்த 20, 21-ந் தேதிகளில் நடைபெற்றது. 

போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கலந்துகொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாற்றுத்திறனாளி சரவணன் கலந்து கொண்டார். 

அவர் 59 கிலோ எடை பிரிவில் 138 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார். 
அவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சரவணன் அருவங்காடு அருகே குண்டாடா கிராமத்தை சேர்ந்தவர். 

இவர் ஊட்டி அருகே தும்மனட்டியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை  சந்தித்து தங்க பதக்கத்தை காண்பித்து  வாழ்த்து பெற்றார்.

மேலும் செய்திகள்