சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடக்க ஒத்துழைப்பு தர வேண்டும்

சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை அமைதியாக நடத்த அரசியல் கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்கள் கேட்டு கொண்டனர்.

Update: 2021-03-23 17:50 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை அமைதியாக நடத்த அரசியல் கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்கள் கேட்டு கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்
சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகளின் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான மதுசூதன்ரெட்டி தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் தோ்தல் பொது பார்வையாளர்கள் எச்.எஸ்.சோனாவனே, முத்துகிருஷ்ணன் சங்கரநாராயணன், போலீஸ் பார்வையாளர் லிரெமோ சோபோ லோதா, செலவின பார்வையாளர்கள் ராகேஷ் படாடியா, வனஸ்ரீ ஹீள்ளன்னவா், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நகர் செயலாளர் என்.எம்.ராஜா, பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ், மற்றும் ரமேஷ் ஆகியோரும், பா.ஜ.க நகர் தலைவர் தனசேகரன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கணேசன் மற்றும் பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர் செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் மயில்சாமி, மாவட்ட தலைவர் பெரோஸ்காந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஒத்துழைப்பு

கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் முத்துகிருஷ்ணன் சங்கரநாராயணன் பேசியதாவது.:-
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பார்வையாளர்களாக வந்துள்ளோம். இந்த தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு அமைதியாக நடைபெறவேண்டும்.அதற்கு உங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை. எங்களை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்து புகார்களை தெரிவிக்கலாம். அதன் மீது உரிய நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தேர்தல் பணியில் ஈடுபடும் வேட்பாளர்கள் தங்கள் பிரசாரங்களுக்கு தேவையான வாகன அனுமதி மற்றும் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்கள் குறித்து விண்ணப்பித்து அனுமதி பெற்று பிரசாரப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது தவிர உங்களின் தேவைகள் என்ன என்று கூறினால் அவைகளை கலெக்டரிடம் கூறி சரி செய்ய நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

தாமதம்

இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் பேசியதாவது:-
திருப்பத்தூர் தொகுதியில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போது அங்கு போதுமான அலுவலர்கள் இல்லாததால் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் அனுமதி தரும்போது 2 வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சந்திக்கும் வகையில் பிரசாரத்திற்கு அனுமதி வழங்குகின்றனர். இதனால் தேவையில்லாமல் மோதல் ஏற்படும் நிலை உருவாகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்றனர்.
இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்