ஓட்டப்பிடாரம் அருகே விதவைப்பெண் வெட்டிக்கொலை
ஓட்டப்பிடாரம் அருகே கள்ளத்தொடர்பில் குழந்தை பெற்ற விதவைப்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக உறவினரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே கள்ளத்தொடர்பில் குழந்தை பெற்ற விதவைப்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக உறவினரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
விதவைப்பெண்
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு சிந்தலக்கட்டை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை மனைவி ராமலட்சுமி (வயது 45). சின்னத்துரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். கணவருக்கு சொந்தமான பூர்வீக வீட்டில் ராமலட்சுமி தனியாக குடியிருந்து இருந்து வந்தார். அப்போது வேறு ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ராமலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை தூத்துக்குடியில் உள்ள ஒரு நபருக்கு அவர் தத்து கொடுத்து உள்ளார்.
வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அவர் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த கணவரின் அண்ணன் கொம்பையா, நீ கள்ளத்தொடர்பில் குழந்தை பெற்றுள்ளாய். இதனால் எங்களுக்கு அவமானமாக உள்ளது. நீ வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இது எனது கணவருக்கு சொந்தமான வீடு, இங்கிருந்து வெளியேற மாட்டேன் என்றவாறு அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே வீட்டில் இருந்த அரிவாளால் ராமலட்சுமியை கொம்பையா சரமாரியாக வெட்டினாராம். இதனால் அலறியவாறு ரத்த வெள்ளத்தில் ராமலட்சுமி கீழே விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதைப்பார்த்த கொம்பையா தப்பி ஓடிவிட்டார். ராமலட்சுமி சிறிது நேரத்தில் இறந்து போனார்.
போலீசார் விசாரணை
இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கொம்பையாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்