மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து வீடுகளுக்கும் வாஷிங்மெஷின் வழங்கப்படும்; நன்னிலத்தில் அமைச்சர் காமராஜ் பிரசாரம்
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து வீடுகளுக்கும் வாஷிங்மெஷின் வழங்கப்படும் என்று நன்னிலத்தில் அமைச்சர் காமராஜ் பிரசாரம் செய்தார்.
வாக்குசேகரிப்பு
நன்னிலம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் பில்லூர், போலக்குடி, திருமெய்ச்சியூர், பண்டாரவாடை, கொட்டூர், குருங்குளம், கொல்லாபுரம், மேனாங்குடி, உபயவேதாந்தபுரம், செம்பியனல்லூர், ரெட்டக்குடி, கோவில்திருமாளம், கொத்தவாசல், மகாராஜபுரம், செருவனூர் ஆகிய இடங்களில் திறந்த வாகனத்தில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
அனைத்து பணிகளையும்
பில்லூரில் அமைச்சர் காமராஜ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நன்னிலம் சட்டசபை தொகுதியில் கடந்த 10 ஆண்டுகள் உங்களோடு ஒருவராக இருந்து பணியாற்றி நன்னிலம் தொகுதிக்கு என்னால் முடிந்த அனைத்து பணிகளையும் செய்து முடித்துள்ளேன். நன்னிலம் மற்றும் குடவாசலில் அரசு கலைக்கல்லூரிகள், வலங்கைமானில் பல்வகை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் தொகுதி முழுவதும் பள்ளிகள் தரம் உயர்த்துதல், சாலை வசதிகளை மேம்படுத்துதல், புதிய பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.
வாஷிங்மெஷின்
அதுமட்டுமல்ல அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைத்திட நானும் சிறு உதவியாய் இருந்துள்ளேன் என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து வீடுகளுக்கும் வாஷிங்மெஷின் வழங்கப்படும். கடந்த ஆட்சி காலத்தில் விலையில்லா மிக்சி, பேன் உள்ளிட்ட பொருட்கள் எப்படி வீடு தேடி வந்து வழங்கப்பட்டதோ, அதேபோல் புதிய ஆட்சி அமைந்தவுடன் அனைத்து வீடுகளுக்கும் வந்து வாஷிங்மெஷின் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அனைத்தையும் நிறைவேற்றுவோம்
மேலும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றுவோம். இந்தத் திட்டங்கள் எல்லாம் உங்களை வந்து சேரவும், நல்லாட்சி தொடர்ந்து நடந்திடவும், உங்களில் ஒருவராக, உங்கள் வீட்டுப்பிள்ளையாக இருந்து தொடர்ந்து பணியாற்றிட எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் வெற்றி பெறச்செய்திட கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.