உங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு தாருங்கள் - விராலிமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் பிரசாரம்

உங்களுக்கு சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று விராலிமலை தொகுதி தி.மு.க.வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2021-03-23 05:36 GMT
ஆவூர், 

விராலிமலை சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் தென்னலூர் எம்.பழனியப்பன் கிராமம் கிராமமாக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவர், கல்குடி, பூதகுடி, வடுகபட்டி, வேலூர், கத்தலூர், பொய்யாமணி விருதாபட்டி, விராலூர் ஆகிய ஊராட்சிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-

நான் கடந்த 2 முறை விராலிமலை தொகுதியில் நின்று தோல்வி அடைந்தாலும், உங்களை சுற்றிசுற்றிதான் வந்து கொண்டிருக்கிறேன். தொகுதி முழுவதும் அனைத்து இன்ப துன்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறேன். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 2 முறை வாய்ப்பு அளித்தீர்கள். இந்த முறைஉங்களுக்கு சேவை செய்வதற்காக எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். அவர் கடந்த 10 ஆண்டுகளில் செய்ததை, நான் 10  மாதங்களில் செய்து காட்டுகிறேன்.


வருகிற 6ந்தேதி ஒரு நல்ல தீர்ப்பை நீங்கள் எழுதவேண்டும். அடுத்து தலைவர் ஸ்டாலின் தான்  முதல்- அமைச்சராக வர உள்ளார். அவர் பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார்.பெண்கள் டவுன் பஸ்சில் இலவச பயணம், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிகரித்து ரூ.300 ஊதியம் உயர்த்தி வழங்குதல், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவி தொகை வழங்குதல் உள்ளிட்ட பல எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
எனவே மக்களாகிய நீங்கள்தான் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து  என்னை வெற்றிபெற செய்ய வேண்டும்என்று அவர் பேசினார். பிரசாரத்தின்போது ஒன்றிய செயலாளர்கள் இளங்குமரன் (மேற்கு), அய்யப்பன் (மத்திய) மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்