தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு எந்த பலனும் இருக்காது; டி.டி.வி.தினகரன் பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு எந்த பலனும் இருக்காது என குளித்தலையில் நடந்த பிரசாரத்தில் டி.டி.வி. தினகரன் கூறினார்.

Update: 2021-03-23 05:00 GMT
குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் நிரோஷா மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி (தனி) அ.ம.மு.க. கூட்டணி தே.மு.தி.க. வேட்பாளர் கதிர்வேல் ஆகியோரை ஆதரித்து குளித்தலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திறந்தவேனில் நின்று நேற்று பொதுமக்கள் முன்னிலையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. எந்த காலத்திலும் ஆட்சி அமைக்க கூடாது, ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு நல்லது இல்லை. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு பயந்துகொண்டு கட்சத்தீவை தாரை வார்த்த காரணத்தினால் தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க வழியில்லாமல் அவதிப்படுகிறார்கள். அப்படி மீன்பிடிக்க சென்றாலும் இலங்கை அரசால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். 

மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்தில் கையெழுத்துயிட்டது, நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது, இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் இறந்தபோது ஆட்சியில் இருந்தது தி.மு.க.தான். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அவர்கள் குடும்பத்திற்கு பலன் இருக்குமே தவிர மக்களுக்கு பலன் இருக்காது. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. விஞ்ஞானம் முறையில் ஊழல் செய்வதில் கில்லாடிகள், 2 ஜி வழக்கில் தப்பித்து கொண்டுவிட்டோம் என நினைக்கிறார்கள், உச்சநீதிமன்றத்தில் மாட்டிக்கொள்வார்கள். கோடிக்கணக்கான கடனில் தமிழ்நாடு தத்தளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி அனைத்தையும் சுரண்டி தூர்வாரி சென்றுவிட்டார். ஏரி, குளங்கள் தூர்வார பலஆயிரம் கோடி செலவு செய்தோம் என்று கூறியிருந்தனர். ஆனால் எங்கும் தூர்வாரப்படவில்லை. ஒரு வேளை வேறு மாநிலங்களில் தூர்வாரி இருக்கலாம்.
தி.மு.க.வை விட பெரிய கம்பெனியாக அ.தி.மு.க. உள்ளது. கொரோனா காலகட்டத்திலேயே அதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தனது பெயரில் நிலமே இல்லை என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என்று சொல்லுகின்றார். அப்படியென்றால் அவர் போலி விவசாயியா?. பச்சை துண்டை போட்டுக்கொண்டு ஓட்டு கேட்க வருவார்கள் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்கனும்.

பழனிசாமி இலவசம் அறிவிக்கிறார், அதை செயல்படுத்த மாதம் ரூ.4000 கோடி தேவைப்படும், வியாபார ரீதியாக இருப்பது தி.மு.க., வியாபாரத்தை நடத்தி கொண்டிருப்பது அ.தி.மு.க. தொகுதிக்கு ரூ.20 கோடி இறக்குகிறார்கள். அதில் பாதி பணத்தை நிர்வாகிகள் எடுத்துகொண்டு ஓடிவிடுவார்கள். அதற்காக பலர் காத்திருக்கிறார்கள், மீதி பணத்தை மக்களிடம் கொடுத்து வாக்கு கேட்பார்கள். இது மக்கள் பணம். எங்கிருந்து வந்ததோ அங்கு தான் செல்லவேண்டும், உங்களது பணம் உங்களுக்கு வரும் அதை வாங்கிக்கொண்டு கதையை முடித்து விடுங்கள். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகளை சொல்லியுள்ளோம், வீட்டிற்கு ஒருவருக்கு நிச்சயம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவோம், இது எங்களுக்கு முதல் படி, எங்களுக்கு வாய்ப்பு அளித்தால் மூன்று ஆண்டுக்குள் வீட்டிற்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவோம். ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி, அனைவரும் நிம்மதியாக வாழும் சூழல், எல்லோருக்கும் சம உரிமை, நீதி கிடைக்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். தரமான ரேஷன் பொருட்கள் வீடு தேடி தரப்படும். குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு தேவையான மணப்பாறை சாலையில் ரெயில்வே மேம்பாலம், மின்மயானம், நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பஸ்நிலையம், காவிரி ஆற்றில் தடுப்பணை, தீயணைப்பு நிலையம், விவசாயம் சார்ந்த தொழில்களை உருவாக்கி வேலைவாய்ப்பை வழங்கப்படும். 

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைத்து தரப்படும். கடவூர் தாலுக்காவில் தீயணைப்பு நிலையம், தரகம்பட்டியில் மகளிர் காவல்நிலையம், அமராவதி ஆற்றின் உபரிநீரை வெள்ளியணை குளத்திற்கு நிரப்பி விவசாயிகள் பயனடைய செய்வது போன்ற பல திட்டங்கள் செய்து தருவோம், எங்கள் கூட்டணிக்கு வெற்றியை தருவதன் மூலம் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற நீங்கள் உதவி செய்திடவேண்டும். தற்போதுதான் தேர்தலே சூடுபிடித்துள்ளது. 
கருத்து கணிப்பு என்ற பெயரில் அவர்களே கட்சி சார்பில் போடுகிறார்கள். மக்களை குழப்பி இந்த கட்சிதான் ஜெயிக்கும் இந்த கட்சிக்கு தான் ஓட்டு போடவேண்டுமென்று கூறுவது ஐபேக் வேலை. எனவே குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க., தே.மு.தி.க. வேட்பாளர்களை வெற்றிபெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்