‘தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 50 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்' - முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி வாக்குறுதி
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 50 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
கன்னிவாடி,
ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த தொகுதிக்கு உட்பட்ட சொக்கலிங்கபுரம், அம்மாபட்டி, மேலப்பட்டி, கொட்டாரபட்டி, நெடியப்பட்டி, மாங்கரை, புதுப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, முத்துராம்பட்டி உள்ளிட்ட 25 கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
கிராமம், கிராமமாக சென்ற அவரை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மக்களை சந்தித்து குறைகளை கேட்பதோடு அவற்றை நிறைவேற்றித்தரப்படும் என்று உறுதி அளித்த வண்ணம் உள்ளார். தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தோட்டங்களில் வேலை செய்யும் விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். கொட்டாரப்பட்டி கிராமத்தில், 100 நாள் வேலைக்கு சென்ற தொழிலாளர்களிடம் தனக்கு ஓட்டுக்கேட்டார். பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள 201 கிராமங்களுக்கு ரூ.75 கோடி செலவில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தை அ.தி.மு.க. அரசு பாதியில் நிறுத்தி விட்டனர். இன்னும் பல்வேறு கிராமங்களில் காவிரி தண்ணீர் கிடைக்கவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
காப்பியப்பட்டியில் அருந்ததியர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். கழிப்பறை, சாலைவசதிகள் செய்து தரப்படும். புதுப்பட்டி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல்லில் இருந்து முத்துராம்பட்டி வழியாக தெத்துப்பட்டிக்கு பஸ்கள் இயக்கப்படும். மேலப்பட்டி கிராமத்துக்கு தினமும் 30 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் கேரள மாநிலத்தில் வீடு, வீடாக காய்கறிகள், அரிசி வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் தமிழகத்தில் ஒரு குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்குமாறு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பலதடவை வலியுறுத்தினார். ஆனால் நிவாரணத்தொகை எதுவும் வழங்கவில்லை. ஆனால் தேர்தல் வரப்போகிறது என தெரிந்தவுடன் ரூ.2,500 கொடுத்தனர். அ.தி.மு.க.வினருக்கு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.
நான் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் எந்த பிரதிபலனுமின்றி 2,400 பேருக்கு சத்துணவில் வேலை வழங்கப்பட்டுள்ளது. சாலைப்பணியாளர்கள், டிரைவர், கண்டக்டர் பணி 4,500 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 50 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். தற்போது நர்ஸ் வேலைக்கும் நீட் தேர்வு கொண்டு வந்துள்ளனர். மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகிற அ.தி.மு.க. அரசால் எதையும் எதிர்த்து பேச முடியாது. காட்டும் இடங்களில் எல்லாம் கையெழுத்து போடுவார்கள். எதற்காக என்று கூட கேட்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின்போது ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் சிவகுருசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சத்யமூர்த்தி, அம்பை ரவி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன், அம்மாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் திருப்பதி, கன்னிவாடி ஜீவானந்தம், காங்கிரஸ் கட்சி முருகானந்தம், ஐ.ஏ.எஸ்.கருப்பையா, முருகேசன், காமாட்சிபுரம் ஊராட்சி பொறுப்பாளர் ஆறுமுகம், தி.மு.க. நிர்வாகி கமலக்கண்ணன், முத்தமிழ்ச் செல்வன், மாவட்ட கவுன்சிலர் சுப்புலட்சுமி, ஜெகநாதன், கோயில் கண்ணன் கொத்தப்புள்ளி ஊராட்சி மன்ற துணை தலைவர் ரெங்கசாமி, கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.