அ.தி.மு.க. வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தேர்தல் பிரசாரம்
அ.தி.மு.க. வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார்.
மலைக்கோட்டை,
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் நேற்று காலை மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உள்ள மாணிக்க விநாயகர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கோவில் வாசலில் இருந்து 13-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி, வீதியாகவும், வீடு, வீடாகவும் நடந்து சென்றும், ஒரு சில இடங்களில் பிரசார வாகனத்தில் இரு கைகளை கூப்பியவாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திருச்சியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கு ரூ.1,200 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். நல்ல சாலைகள் அமைத்து தரப்படும். மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. குடிநீர் தட்டுப்பாடு இல்லை. சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. எனவே, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நல்ஆசியுடன் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்திட, மக்களுக்கான நல்லாட்சி தொடர்ந்திட உங்கள் வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் பதிவு செய்து மேலான ஆதரவை தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.தொடர்ந்து 11-வது வார்டுக்கு உட்பட்ட மலைக்கோட்டை உள் வீதிகளிலும், மாலையில் 10-வது வார்டுக்கு உட்பட்ட ஆண்டாள் வீதி, வாணப்பட்டறை தெரு, பட்டவொர்த்ரோடு, சங்கரன் பிள்ளைதெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதரவு திரட்டினார்.
இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் ராஜேஷ்குமார், சதீஷ், மகேந்திரன், பா.ம.க.மாவட்ட செயலாளர் திலீப்குமார், த.மா.கா. நிர்வாகிகள் நந்தா செந்தில்வேல், கே.டி.தனபால், அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல், ஆவின் தலைவர் கார்த்திகேயன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன், இணைச்செயலாளர் ஜாக்குலின், மாநில பீடி, தீப்பெட்டி பிரிவு செயலாளர் சகாப்தீன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ்குப்தா, ஏர்போர்ட் விஜி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், வெல்லமண்டி ஜவகர்லால் நேரு மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.