சேலம் அண்ணா பூங்காவில் பார்வையாளர்கள் அனுமதிக்கு திடீர் கட்டுப்பாடு

கொரோனா நோய் தொற்று முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் அண்ணா பூங்காவில் பார்வையாளர்களை அனுமதிக்க திடீர் கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதித்துள்ளது.

Update: 2021-03-22 22:30 GMT
சேலம்:
சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாநகர பகுதிகளில் கொரோனா பரவல் ஏற்படா வண்ணம் தடுக்கும் நடவடிக்கையாக, சுகாதார அலுவலர்கள் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள் மூலம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் தனிநபர் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன் கீழ் அபராதம் விதிக்கப்படுவதுடன், விழிப்புணர்வூட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு மக்களின் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள அண்ணா பூங்காவில் அனைத்து நாட்களிலும் காலை 11  மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். சனி மற்றும் ஞாயிறுக்கிழமை விடுமுறை நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர்.  கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் நலன் கருதி இனிவரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இந்த நேரக்கட்டுப்பாட்டுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் அண்ணா பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்கள், தவறாது முக கவசம் அணிந்து வரவேண்டும். பூங்காவிற்குள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பதோடு கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு தந்து, நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்