மதுபானம் விற்றால் சிறப்பு குழுவினரிடம் புகார் தெரிவிக்கலாம்
தேர்தல் நடத்தை விதிகளை மீறி கடலூர் மாவட்டத்தில் மதுபானம் விற்றால் சிறப்பு குழுவினரிடம் புகார் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் தேர்தல் விதிகளுக்கு முரணாக மதுபானங்களை கடத்துதல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்வதை தடுக்க மாவட்டம் வாரியாக மதுவிலக்கு அமல்பிரிவு, காவல்துறை அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்புக்குழுவினர் அந்தந்த மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானத்தை பதுக்குதல், வினியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் டாஸ்மாக் சட்ட அமலாக்கப் பிரிவு அலுவலர்களுடன் இணைந்து ஆய்வு பணியையும் மேற்கொள்வார்கள்.
மதுபான கூடங்கள்
அரசு நிர்ணயித்த நேரத்தில் மதுபான கூடங்கள் செயல்படுவதை கண்காணிப்பது, மதுபான சில்லரை விற்பனை கடைகளில் பதிவேட்டை சரியாக பராமரிக்கிறார்களா என்பது போன்ற பணிகளையும் மேற்கொள்வார்கள். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் சிதம்பரம் கோட்ட கலால் அலுவலர் சத்தியன் (செல்போன் எண் 90951 32388) தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, தலைமைக் காவலர் பண்ருட்டி மகேஷ் (94981 54903) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எனவே தேர்தல் நடத்தை விதிகளை மீறி சட்டவிரோதமாக மதுபானம் பதுக்கி வைத்திருந்தாலோ, வினியோகம் செய்தாலோ, மேற்குறிப்பிட்டுள்ள சிறப்புக்குழு அலுவலர்களை, பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். தகவல் தெரிவிக்கும் பொதுமக்களின் ரகசியம் காக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.