தனியார் நிறுவனத்தில் கொள்ளை முயற்சி
சிவகாசியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகாசி, மார்ச்
சிவகாசியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனியார் நிறுவனம்
சிவகாசி-திருத்தங்கல் மெயின் ரோட்டில் காகிதம் மற்றும் போர்டு விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் சுப்புராஜ் (வயது 57) கடந்த சனிக்கிழமை இரவு வழக்கம் போல் அலுவலகம் முடிந்தவுடன் நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
நேற்று காலை வழக்கம்போல் வந்து அலுவலகத்தை திறந்து பார்த்தபோது பணப் பெட்டி வைத்திருந்த அறையின் கண்ணாடி கதவு திறக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் நள்ளிரவில் கொள்ளையர்கள் நிறுவனத்துக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றிருப்பது தெரிய வந்தது.
ஏமாற்றம்
நள்ளிரவில் நிறுவனத்தின் மேல் பகுதியில் உள்ள ஜன்னல் கம்பியை அறுத்த கொள்ளை கும்பல் பின்னர் உள்ளே புகுந்து பணம் இருந்த இரும்பு லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர்.
லாக்கரை உடைக்க முடியாமல் போகவே அங்கிருந்து அதனை இழுத்து வந்து அதே பகுதியில் உள்ள மற்றொரு அறைக்கு கொண்டு வந்து உடைக்க முயன்றுள்ளனர்.
ஆனாலும் அதனை உடைக்க முடியாததால் கொள்ளை கும்பல் ஏமாற்றத்துடன் பணப்பெட்டியை அங்கேயே விட்டு, விட்டு தப்பிச் சென்றுள்ளது.
ரூ.18 லட்சம்
இதனால் அந்த லாக்கரில் இருந்த ரூ.18 லட்சம் கொள்ளையர்கள் கையில் சிக்காமல் தப்பியது. கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
சிவகாசி-திருத்தங்கல் மெயில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் கொள்ளை சம்பவம் நடந்து இருப்பது சிவகாசி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.