குரும்பர் இன மக்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு கோரி பழனி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
குரும்பர் இன மக்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு கோரி பழனி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
பழனி:
மக்கள் சமூகநீதி பேரவையினர் மற்றும் தமிழ்நாடு குரும்பா மக்கள் முன்னேற்ற சங்கத்தினர் பழனி தாலுகா அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர்.
பின்னர் திடீரென தாலுகா அலுவலக நுழைவுவாயில் முன்பு கருப்புகொடியுடன், குரும்பர் இன மக்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
மேலும் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா தலைமையிலான போலீசார், மக்கள் சமூகநீதி பேரவையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்யக்கூடாது எனவும், தாலுகா அலுவலகத்தில் மனு மட்டும் கொடுக்கலாம் என்றும் அறிவுறுத்தினர்.
இதனால் அந்த அமைப்பினர், தாலுகா அலுவலகம் சென்று தங்கள் கோரிக்கை குறித்த மனுவை அளித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் 24 மாவட்டங்களில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குரும்பர் இன மக்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளோம். தற்போது தமிழக அரசு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி உள்ளது.
இதனால் எங்கள் சமூக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எங்கள் சமூக மக்களுக்கு 5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றனர்.
இதில் மக்கள் சமூகநீதி பேரவையின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தன், பொருளாளர் சுமதி, மாவட்ட அமைப்பாளர் சாஸ்தா, இளைஞரணி அமைப்பாளர்கள் மகேந்திரன், பூமிராஜன், சுப்பிரமணியன், ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.