கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் 10-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55), இவர் வண்டலூரில் தனியார் நிறுவனத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வண்டலூர் செல்வதற்காக கூடுவாஞ்சேரி மின்வாரியம் எதிரே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் கிருஷ்ணமூர்த்தி மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணமூர்த்தி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.