சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

காரமடையில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர்.

Update: 2021-03-22 10:12 GMT
காரமடை

காரமடையில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர். 

காரமடை 

கோவை மாவட்டம் காரமடை பஸ் நிறுத்த பகுதியில் வாரசந்தை மற்றும் கடைகள், உணவகங்கள், மருந்தகங்கள், பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் ஆகியவை உள்ளது. 

மேலும் காரமடை சுற்றியுள்ள வெள்ளியங்காடு, தோலம்பாளை யம், சிக்காரம்பாளையம், கன்னார்பாளையம், மருதூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பினரும் காரமடை பஸ் நிலையம் வந்து தான் பிற ஊர்களுக்கு செல்லும் நிலை உள்ளது.

சாக்கடை கழிவுநீர் 

இந்த நிலையில் காரமடை பஸ் நிறுத்தம் அருகே சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டு உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், நிரம்பி சாலையில் வழிந்தோடி வருகிறது. 

இதனால் அந்தப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- 

கோவை- மேட்டுப்பாளையம் மெயின் சாலையில் சாக்கடை கழிவுநீர் குளம்போல தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி செல்வதால், அந்த வழியாக செல்பவர்கள் மீது படுகிறது. 

தொற்றுநோய் பரவும் அபாயம் 

இது தொடர்பாக அதிகாரிகளை சந்தித்து புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டு வருவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்