முதுமலை வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடக்கம்

முதுமலை வனத்தில் வனவிலங்குகளின் தாகத்தை தணிப்பதற்காக வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2021-03-22 10:10 GMT
கூடலூர்

முதுமலை வனத்தில் வனவிலங்குகளின் தாகத்தை தணிப்பதற்காக வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கோடை வறட்சி

கூடலூர், முதுமலை பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் புலிகள் காப்பகத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு விட்டது. இதேபோல் பசுந்தீவன தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. 

இதனால் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. இவ்வாறு வரும் காட்டு யானைகள் கூடலூர் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் பயிரிட்டுள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்துவதுடன், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி, சிங்காரா, சீகூர் வனச்சரகங்கள் முட்புதர் காடுகளாக உள்ளது. இங்கு புலிகள், யானைகள், சிறுத்தை அதிகளவு வசித்து வருகின்றன. கோடை வறட்சியால் முட்புதர் காடுகளில் அனல் காற்று வீசுகிறது. 

இதனால் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளின் தாகத்தை தீர்ப்பதற்காக வனத்துறை சார்பில் பல இடங்களில் தரை தொட்டிகள் கட்டி வைக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் நிரப்பும் பணி தொடக்கம்

தற்போது மசினகுடி, சிங்காரா, சீகூர் வனப்பகுதியில் உள்ள தரை தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறையினர் தொடங்கி உள்ளனர். இதற்காக மின்மோட்டார் மூலம் லாரிகளில் குடிநீர் ஏற்றப்படுகிறது.  பின்னர் வனத்துக்குள் கொண்டு சென்று தொட்டிகளில் ஊற்றப்படுகிறது. 

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானைகள் காட்டெருமைகள், மான்கள், உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் செல்வதை தடுக்க வனத்தில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. 

கோடை மழை பெய்தால் மட்டுமே வறட்சியின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. அதுவரை வனத்துக்குள் தண்ணீர் ஊற்றும் பணி நடைபெற்று வரும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்