விராலிமலை தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன - அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2021-03-18 01:48 GMT
ஆவூர், 

விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்  தன்னாங்குடியில் நேற்று காலை 7 மணி அளவில்  பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து பிலிப்பட்டி, பன்னீர்பட்டி, கோங்குடிப்பட்டி, கருப்பர்மலை, கே.நாங்குபட்டி, மேலசித்தகுடிப்படி, கீழசித்தகுடிபட்டி, எஸ்.நாங்குபட்டி, மாங்குடி, மருதம்பட்டி, சின்னமூலிப்பட்டி, பெரியமூலிபட்டி, ஆலங்குடி, வேலப்புடையான்பட்டி உள்பட 37 கிராமங்களில் திறந்தவேனில் சுற்றுப்பயணம் செய்து, வாக்குகள் சேகரித்தார். அப்போது, அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர்  சாலையோரங்களில் நடந்து செல்லும் பொதுமக்களிடமும், வாகன ஓட்டிகளிடமும், வயல்வெளிகளில் விவசாய வேலை செய்யும் விவசாயிகளிடமும், கூலித்தொழிலாளிகளிடமும் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது, அவர் பேசியதாவது:-

விராலிமலை தொகுதியில் பல்வேறு நல்ல திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கஜா புயல் காலத்திலும்,  கொரோனா காலத்திலும் தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்துள்ளேன். மேலும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் அளவில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 100 ஆண்டு கால கனவான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளேன். 

இந்த திட்டத்தின் மூலம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மற்றும் புதுக்கோட்டை மாவட்டம்  மஞ்சள், வாழை, நெல் விளையும் பசுமை பூமியாக மாறும். அதேபோல எனது சி.வி.பி. பவுண்டேசன் மூலம் விராலிமலை தொகுதி முழுவதும் மருத்துவ முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், மகளிர் சிறப்பு மருத்துவ முகாம்கள், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் போன்ற எண்ணற்ற நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். மேலும் அ.தி.மு.க. அரசு விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாய கடன்களையும், பொதுமக்கள் அடகு வைத்திருந்த 6 பவுனுக்குள்ளான  நகை கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளது. அ.தி.மு.க. அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வாஷிங் மெஷின், வருடத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,500 உதவித்தொகையும் வழங்கப்படும். இன்னும் பல நல்ல திட்டங்களை  செய்து கொடுக்க தயாராக உள்ளோம். எனவே நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை மீண்டும் வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன்.இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

தேர்தல் பிரசாரத்தின்போது ஒவ்வொரு கிராமத்திலும் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு நபர்கள் மாற்று கட்சியில் இருந்து விலகி அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்