சேலத்தில் வாகன சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல்

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-17 22:52 GMT
சேலம்:
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன தணிக்கை
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதி முறைகளின் அடிப்படையில் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலை கண்காணிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் வாகன தணிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நஞ்சம்பட்டி மிலிடெரி ரோடு ரவுண்டானா பகுதியில் கூட்டுறவு சீனியர் ஆய்வாளர் இந்திரா பிரியதர்ஷினி தலைமையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
ரூ.1½ லட்சம் பறிமுதல்
அப்போது, ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் இருந்து சேலம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. அதில் இருந்தவர் செவ்வாய்ப்பேட்டை தெய்வநாயகம் தெருவை சேர்ந்த கணேஷ் மாலி என்பதும், அவர் உரிய ஆவணமின்றி ரூ.81 ஆயிரத்து 470-ஐ எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், கருமந்துறையில் இருந்து சேலம் நோக்கி வந்த மற்றொரு காரில் சேலம் நியூ பேர்லேண்ட்ஸ் ஈ.பி. காலனியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உரிய ஆவணமின்றி ரூ.69 ஆயிரத்து 400-ஐ எடுத்து சென்றது தெரியவந்தது. இதனால் அந்த பணத்தையும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். மொத்தம் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி வாகனங்களில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 870 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்