தனியார் மயமாக்கலை கண்டித்து பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்-ஆர்ப்பாட்டம்

தனியார் மயமாக்கலை கண்டித்து பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-03-17 21:16 GMT
தனியார் மயமாக்கலை கண்டித்து
பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்-ஆர்ப்பாட்டம்
ரூ.50 கோடி பிரீமியத்தொகை செலுத்துவது பாதிப்பு
திருச்சி, 
தனியார் மயமாக்கலை கண்டித்து பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் மயம்
மத்திய அரசின் கீழ் இயங்கும் பொது இன்சூரன்ஸ் நிறுவனமொன்று தனியார் மயமாக்கப்படும் என்று சமீபத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு பாலிசிதாரர்கள் மற்றும் நேஷனல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அசூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வேலை நிறுத்தம்

இந்த நிலையில் பொது இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்று தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி, நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள பொது இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள், ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தம் காரணமாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் பிரீமியம் செலுத்துதல் மற்றும் காசோலை பரிமாற்ற சேவை முற்றிலும் பாதிப்படைந்தது. அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் திருச்சி ஒத்தக்கடை அருகில் உள்ள பொது இன்சூரன்ஸ் நிறுவனம் முன்பு அதிகாரிகள், ஊழியர்கள் திரண்டு வாயிற் கூட்டம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவன தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்சங்கங்கள் கூட்டு போராட்டக்குழு நிர்வாகிகள் முத்துக்குமரன், ராஜமகேந்திரன், ரவிச்சந்திரன், கணேஷ், மணிவேல், ஸ்ரீதர், செந்தில், ரெங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டத்தில் 20 பொது இன்சூரன்ஸ் கிளை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. வேலைநிறுத்தத்தில் அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் முழுமையாக ஈடுபட்டதால், வாடிக்கையாளர்கள் செலுத்தக்கூடிய பிரீமிய தொகை ரூ.50 கோடி வரை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக ஊழியர் சங்க நிா்வாகிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்