ஏரி-ஆற்றுப்பாசன விவசாய சங்கம் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு? மாநில தலைவர் பூரா.விசுவநாதன் பேட்டி
ஏரி-ஆற்றுப்பாசன விவசாய சங்கம் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு? என்று மாநில தலைவர் பூரா.விசுவநாதன் கூறினார்.
திருச்சி,
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் பூரா.விசுவநாதன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் உலகநாதன், செய்தித்தொடர்பாளர் அரவிந்தசாமி, மாநில துணைத்தலைவர் கண்ணப்பன், துணை செயலாளர் சுப்பிரமணி, துணை அமைப்பாளர் ராஜேந்திரன், திருச்சி மாவட்ட தலைவர் அ.சுப்பிரமணி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொதுக்குழு முடிவு தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் பூரா.விசுவநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தமிழக சட்டசபையில் சட்டம் இயற்ற வேண்டும். கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கியில் விவசாயம் சார்ந்த அனைத்து கடன், நகைக் கடன் டாப்செட்கோ கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் ஏமாற்றாமல் நிறைவேற்றப்படவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நாங்கள் முன் வைத்திருக்கிறோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவாதம் அளிக்கும் கட்சிக்கு சட்டமன்ற தேர்தலில் ஆதரவு அளிப்பது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான இறுதி முடிவு வருகிற 24-ந் தேதி மீண்டும் பொதுக்குழு கூடி முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.