உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற பட்டுப்புடவைகள் பறிமுதல்
ஜெயங்கொண்டத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.2½ லட்சம் பட்டுப்புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயங்கொண்டம்
வாகன சோதனை
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அந்தந்த சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஜெயங்கொண்டம் அருகே திருச்சி-சிதம்பரம் சாலை புதுச்சாவடி அருகே பறக்கும் படை-2 அதிகாரி நடராஜன் தலைமையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பட்டுப்புடவைகள் பறிமுதல்
அப்போது அந்தவழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் உட்கோட்டை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அட்டைப்பெட்டி ஒன்றில் ரூ.2 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான 122 பட்டுப்புடவைகளை கொண்டு வந்தார். ஆனால், அந்த பட்டுப்புடவைகள் கொண்டு செல்ல ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.