தேர்தல் பணியில் ஈடுபடும் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தேர்தல் பணியில் ஈடுபடும் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
கடலூர்,
உலகத்தை ஆட்டி படைத்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்த நிலையில், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், சோப்பு போட்டு கைகளை கழுவுதல் போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலம் குறைந்தது.
இதற்கிடையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்களும் தடுப்பூசி போட்டனர். பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட அரசு உத்தரவிட்டது.
அதன்படி தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட அரசு உத்தரவிட்டது.
2-வது அலை இல்லை
இது பற்றி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமாரிடம் கேட்ட போது, வெளி நாடுகளில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நமது மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனாவின் 2-வது அலை இல்லை.
இருப்பினும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறோம். முன்களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் 90 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மீதியுள்ளவர்களும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தடுப்பூசி
கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் 14 ஆயிரம் பேருக்கு வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் தேர்தல் பயிற்சி முகாமில் கொரோனா தடுப்பூசி போட மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி அவர்களுக்கு தடுப்பூசி போட இருக்கிறோம். இதற்காக வட்டார மருத்துவ அலுவலர்கள் தலைமையில் ஒரு மையத்திற்கு 6 குழுக்கள் அமைத்து இருக்கிறோம். அவர்கள் தடுப்பூசி போடுவார்கள். மாவட்டத்தில் இது வரை 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டு உள்ளோம் என்றார்