ராமேசுவரம் கோவிலில் தங்க தேரோட்டம்
10 ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் தங்க தேரோட்டம் நடந்தது.
ராமேசுவரம்,
10 ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் தங்க தேரோட்டம் நடந்தது.
நேர்த்திக்கடன்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்த கோவில் அலுவலகத்தில் ரூ.2000 செலுத்தி தங்கத்தேரை 3-ம் பிரகாரத்தை சுற்றி இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
மேலும் ராமேசுவரம் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தங்கத்தேர் முழுமையாக பயன்பாட்டுக்கு வராமல் வெறும் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் தங்கத் தேரை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பலமுறை சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் தங்கத்தேர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதற்காக நேற்று தங்கத்தேர் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு 3-ம் பிரகாரத்தின் மைய பகுதியில் நிறுத்தி வைக்கப் பட்டது. தொடர்ந்து அம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்கத்தேரில் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை பூஜைக்கு பின்னர் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் முதன் முதலாக நேற்று தங்கத் தேர் இழுக்கப்பட்டது.
கட்டணம் நிர்ணயம்
பிகாரத்தின் மையப் பகுதியில் இருந்து இழுக்கப்பட்ட தங்கத்தேர் 3-ம் பிரகாரத்தை சுற்றி வந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்தது. தங்க தேரோட்ட நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பழனிக்குமார் உள்ளிட்ட திருக்கோவில் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் மீண்டும் தங்கத்தேர் பயன்பாட்டிற்கு வந்திருப்பது பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தி உள்ளது. தங்கதேர் இழுப்பதற்கு ரூ. 2000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.