தாராபுரத்தில் தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. பிரமுகர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

தாராபுரத்தில் தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. பிரமுகர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

Update: 2021-03-17 16:47 GMT
தாராாபுரம், மார்ச். 18-
தாராபுரத்தில்  தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. பிரமுகர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. திருப்பூரில் மக்கள் நீதிமய்யம் பொருளாளர் நிறுவனத்திலும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வருமான வரித்துறை சோதனை 
ம.தி.மு.க. திருப்பூர் மாவட்ட துணை செயலாளராக இருப்பவர் கவி நாகராஜ். இவருடைய வீடு தாராபுரத்தில் இருந்து அலங்கியம் செல்லும் சாலையில் உள்ளது. இவர் தாராபுரத்தில் பல்பொருள் அங்காடி, பனியன் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு இவருடைய வீட்டிற்கு 3 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர்  வந்தனர். அப்போது அவருடைய வீடு பூட்டப்பட்டு இருந்தது.  இதற்கிடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்திருக்கும் தகவல் தெரிவித்தும், கவிநாகராஜ் வீட்டிற்கு வந்தார். அதை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள், கவிநாகராஜ் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர். இந்த சோதனை பிற்பகல் 3.15 மணி முதல் மாலை 4.15 மணிவரை நடந்தது. ஒரு மணிநேரம் சோதனைக்கு பின்னர் கவி நாகராஜ் வீட்டில் இருந்து சில ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 
தி.மு.க. நகர செயலாளர் 
அதை தொடந்து வருமான வரித்துறை அதிகாரிகள்  சென்னியப்பாநகரில் உள்ள தி.மு.க.நகர செயலாளர் தனசேகரன் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு வரை நடைபெற்றது. சோதனையில் ஆவணங்கள், பணம் கைப்பற்றப்பட்டதா? என அதிகாரிகளிடம் கேட்டதற்கு முழு சோதனைக்கு பிறகே தெரியவரும் என்று  வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதற்கிடையில் தி.மு.க. நகர செயலாளர் தனசேகரன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதை அறிந்ததும், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அவர் வீட்டின் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதா கட்சி சார்பில் தமிழக பா.ஜனதா  தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் கயல்விழி செல்வராஜ் களத்தில் இருக்கிறார். தேர்தல் பிரசாரம் களை கட்ட தொடங்கிய நிலையில்  தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. நிர்வாகி வீ்டுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. 
ம.நீ.ம. மாநில பொருளாளர்
 கவி நாகராஜின் அண்ணன்  சந்திரசேகர். இவர், திருப்பூர் லட்சுமிநகர் பிரிஜ்வே காலனி விரிவாக்கம் பகுதியில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருவதோடு, நூல் வியாபாரமும் செய்து வருகிறார். மேலும் முக கவசம், கொரோனா கவச ஆடைகள் ஆகியவற்றையும் தயாரித்து வருகிறார். இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகரிகள் 10-க்கும் மேற்பட்டோர் 5 கார்களில் வந்து சோதனை நடத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. இந்த நிறுவனத்தில் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், நிறுவனத்தில் அருகே உள்ள அவருடைய வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தினர். 
 சந்திரசேகர் மக்கள் நீதிமய்யம் கட்சியின் மாநில பொருளாளராக இருந்து வருகிறார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று (வியாழக்கிழமை) திருப்பூரில், மக்கள் நீதிமய்யம் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்த நிலையில், சந்திரசேகர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்