மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

ஊட்டியில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

Update: 2021-03-17 16:20 GMT
ஊட்டி,

ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு தேர்த்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்குகிறது. 

பின்னர் வருகிற 21-ந் தேதி காப்புக்கட்டுதல், அடுத்த மாதம்(ஏப்ரல்) 16-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் தேர் முகூர்த்தக்கால் நடுதல், 19-ந் தேதி தேர் கலசம் ஏற்றுதல், 

20-ந் தேதி திருத்தேர் வடம் பிடித்தல், 21-ந் தேதி மஞ்சள் நீராட்டுடன் கொடியிறக்கம், 23-ந் தேதி விடையாற்றி உற்சவம், அம்மன் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

திருவிழாவையொட்டி வருகிற 22-ந் தேதி முதல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 19-ந் தேதி வரை உபயதாரர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினர் சார்பில் தேர் ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலத்தில் ஆதிபராசக்தி, துர்க்கை, பராசக்தி, காமாட்சி, ராஜராஜேஸ்வரி, கருமாரி, மீனாட்சி, சரஸ்வதி, பட்டத்தரசி உள்பட பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் மாரியம்மன் முக்கிய வீதிகளில் உலா வருகிறார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் அடுத்த மாதம்(ஏப்ரல்) 20-ந் தேதி நடைபெறுகிறது. பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் முத்துராமன் கூறியதாவது:-
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதாலும், கொரோனா பரவலை தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதாலும் மாரியம்மன் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. 

மேலும் பூஜை உள்பட திருவிழா நிகழ்ச்சிகளை இரவு 10 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

கோவில் வளாகத்தை சுற்றி தற்காலிக கடைகள் அமைப்பதற்கு அனுமதி இல்லை. திருவிழா நடைபெறும் நாட்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்