ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா வேட்புமனு தாக்கல்
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா வேட்புமனு தாக்கல் செய்தார்.
சண்முகையா வேட்புமனு தாக்கல்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரான சண்முகையா நேற்று ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கனிமொழி எம்.பி. முன்னிலையில், சண்முகையா தனது வேட்புமனுவினை தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட கலால் உதவி அலுவலர் தெய்வநாயகத்திடம் வழங்கினார். சண்முைகயாவுக்கு மாற்று வேட்பாளராக அவரது உறவினரான விஜி வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி உடன் இருந்தார்.
பிரசாரம்
முன்னதாக ஓட்டப்பிடாரம் உலகாண்ட ஈசுவரி அம்மன் கோவிலில் சண்முகையா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், ஓட்டப்பிடாரம் தேரடி திடலில் பிரசாரத்தை தொடங்கினார்.
சண்முகையாவுக்கு ஆதரவாக தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மீண்டும் மக்கள் பணியாற்ற...
கொரோனா ஊரடங்கு காலத்திலும் சண்முகையா எம்.எல்.ஏ. மக்களை சந்தித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக நானும் பலமுறை இப்பகுதிக்கு வந்துள்ளேன். மேலும் சண்முகையா என்றும் உங்களுடனே இருந்து மக்களின் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்து வருகிறார். எனவே, அவர் மீண்டும் உங்களுக்காக பணியாற்ற வாய்ப்பு தாருங்கள்.
தமிழகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் அடகு வைத்துள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலானது தமிழகத்தை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுக்க கூடிய தேர்தல் ஆகும். தமிழகத்தை மீட்டெடுக்க கூடிய ஒரே தலைவராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.
பின்தங்கிய தமிழகம்
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் கிடையாது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் போலீஸ் அதிகாரியே எந்த அளவுக்கு நடத்தப்படுகிறார் என்பது மக்களுக்கு தெரியும். அனைத்து பகுதிகளிலும் போதிய அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
ரேஷன் கடைகளிலும் எந்த பொருட்களும் முறையாக வழங்கப்படவில்லை. மகளிர் சுய உதவிக்குழுக்களும் சரியாக செயல்பட முடியாத நிலை உள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலும் தொழிலாளர்களுக்கு முறையாக பணி வழங்கப்படவில்லை. பல்வேறு துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. இதனால் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கி உள்ளது.
உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து...
விரைவில் அமையவுள்ள தி.மு.க. ஆட்சியில் மக்களின் அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 150 நாட்கள் பணி வழங்கப்பட்டு, தினசரி சம்பளம் ரூ.300 ஆக உயர்த்தி வழங்கப்படும். தேசிய ஊரக வேலை திட்டம் நகர பஞ்சாயத்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும். 5 பவுனுக்கு குறைவான நகைக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். இதேபோன்று விவசாயிகள் வாங்கிய கடன்களும் தள்ளுபடி ெசய்யப்படும்.
மக்களின் நலன்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும். எனவே, பொதுமக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சண்முகையாவை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, சுப்பிரமணியன், மாடசாமி, ராமசாமி, சுரேஷ்காந்தி, தூத்துக்குடி பகுதி செயலாளர்கள் பொன்னரசு, சிவகுமார், தெற்கு மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அழகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம், தி.மு.க. ரகுராமன், பூங்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பாஸ்கர், ஆதி தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, துணை அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர்கள் நவநீதகிருஷ்ணன், தெய்வானை, ஜெயலட்சுமி, ஈஸ்வரி, பஞ்சாயத்து தலைவர்கள் ஹரி பாலகிருஷ்ணன், ஆனந்தகுமார், அருண்குமார் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.