சட்டமன்ற தேர்தல் நேர்மையான முறையில் நடக்க தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க வேண்டும்

சட்டமன்ற தேர்தல் நேர்மையான முறையில் நடக்க தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்க வேண்டும் என்று பொள்ளாச்சி, வால்பாறை தொகுதி செலவின பார்வையாளர் ராம்கிருஷ்ணா பேடியா உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2021-03-17 02:07 GMT
பொள்ளாச்சி,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கவும், வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் அந்த குழுவினருக்கு பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் உள்ள மகாலிங்கம் என்ஜினீயரிங் கல்லூரியில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு பொள்ளாச்சி, வால்பாறை தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் ராம்கிருஷ்ணா பேடியா தலைமை தாங்கி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் வாகன சோதனையை நடத்தி உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும்.

 இதற்கிடையில் தேர்தல் விதிமுறை மீறல்களை கண்காணிக்க வேண்டும்.
பிரசாரம், பொதுக்கூட்டம், தெருமுனை பிரசாரம் போன்றவற்றிற்கு உரிய அனுமதி பெற வேண்டும்.  அனுமதி பெறுவதற்கு கடிதம் கொடுக்கும் போது வேட்பாளர்களின் செலவின பட்டியலை கொடுக்க வேண்டும். இதற்கிடையில் பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளை வீடியோ பதிவு செய்யப்படும். 

அந்த பதிவை கொண்டு செலவினம் கணக்கிடப்படும். இதுவும் வேட்பாளர்கள் கொடுக்கும் செலவு கணக்கு பட்டியலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். 

ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளர் ரூ.30 லட்சத்து 80 ஆயிரம் வரை செலவு செய்யலாம். தேர்தல் நேர்மையான முறையில் அமைதியாக நடைபெற அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வைத்திநாதன் (பொள்ளாச்சி), துரைசாமி (வால்பாறை) மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தணிகைவேல், வெங்கடாச்சலம், ராஜா, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சிவக்குமார், விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்