கொரோனா தொற்று பரவல் காரணமாக திருச்சி சேதுராப்பட்டி அரசு என்ஜினீயரிங் கல்லூரி மூடல் விடுதி மாணவ-மாணவிகள் வீட்டிற்கு அனுப்பி வைப்பு
கொரோனா தொற்று பரவல் காரணமாக திருச்சி சேதுராப்பட்டி அரசு என்ஜினீயரிங் கல்லூரி மூடப்பட்டது. விடுதி மாணவ-மாணவிகளும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி,
கொரோனா தொற்று பரவல் காரணமாக திருச்சி சேதுராப்பட்டி அரசு என்ஜினீயரிங் கல்லூரி மூடப்பட்டது. விடுதி மாணவ-மாணவிகளும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிகரிக்கும் கொரோனா
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மார்ச் மாதத் தொடக்கத்தில் ஒற்றை இலக்க எண்ணில் இருந்த பாதிப்பு கடந்த இரண்டு, மூன்று தினங்களாக இரட்டை இலக்க எண்ணிற்கு உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் மீறி திருச்சியில் உள்ள 2 தனியார் பள்ளிகள், ஒரு தனியார் கல்லூரி ஆகியவற்றில் மாணவ- மாணவிகளுக்கு தொற்று அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அரசு என்ஜினீயரிங் கல்லூரி மூடல்
இதேபோல திருச்சி அருகே சேதுராப்பட்டியில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வரும் மாணவ-மாணவிகள் 10 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையறிந்த திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராம் கணேஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கல்லூரிக்கு சென்று நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து சேதுராப்பட்டி அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக கல்லூரி முதல்வர் சாந்தி தெரிவித்தார். இதன் காரணமாக கல்லூரி மூடப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக விடுதியில் தங்கியிருந்து படித்து வரும் மாணவ- மாணவிகள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
12 பேர் டிஸ்சார்ஜ்
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து 12 பேர் நேற்று பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.