திசையன்விளை அருகே கடத்தப்பட்ட வாலிபரை மீட்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திசையன்விளை அருகே கடத்தப்பட்ட வாலிபரை மீட்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-03-16 20:38 GMT
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவருடைய மகன் சுரேஷ் (வயது 29). இவர் திசையன்விளை - இடையன்குடி ரோட்டில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரதா (24). இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. 

சுரேஷ் தினமும் இரவு 9 மணியளவில் பட்டறையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனில் குடும்பத்தினர் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இரவு முழுவதும் சுரேசை பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை 
இந்த நிலையில் நேற்று காலை ஆனைகுடி-சொக்கலிங்கபுரம் சாலையில் உள்ள சிரட்டை கம்பெனி அருகே அவரது மோட்டார் சைக்கிள் கிடந்தது. அதில் ரத்தக்கறை படிந்து இருந்தது. மேலும் அவர் வீட்டுக்கு வாங்கி சென்ற சுவீட் பாக்சும் அருகில் கிடந்தது. அவர் என்ன ஆனார்? என்பது குறித்து தெரியவில்லை. 

இதுகுறித்து சுரேசின் தந்தை தங்கபாண்டி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகன் சுரேஷ் ரூ.2 லட்சத்துடன் வந்ததாகவும், அவரை யாரோ கடத்தி சென்று விட்டதாகவும் கூறி இருந்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி வழக்குப்பதிவு செய்து சுரேசை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். 

மேலும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். நெல்லையில் இருந்து போலீல் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு ஆனைகுடி சாலையை நோக்கி ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. வெல்டிங் பட்டறை அமைந்துள்ள பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். 

இதற்கிடையே, கடத்தப்பட்ட சுரேசை மீட்டு தரக்கோரி கரைசுத்துபுதூரில் கிராம மக்கள் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். வெல்டிங் பட்டறை உரிமையாளர் கடத்தப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்