தர்மபுரி அருகே காரில் கொண்டு வரப்பட்ட ரூ.9.70 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
தர்மபுரி அருகே உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.9 லட்சத்து 70 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி,
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து செல்பவர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், தர்மபுரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கடகத்தூர் தொழிற்பயிற்சி நிலையம் அருகே நேற்று பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அதில் ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
பணம் பறிமுதல்
இதுதொடர்பாக அந்த காரில் வந்த பாலக்கோடு தாலுகா கோவிலூர் கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினார்கள். அப்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறி உரிய ஆவணங்கள் இன்றி அந்த பணத்தை எடுத்து வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து தர்மபுரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், உதவி கலெக்டருமான பிரதாப்பிடம் ஒப்படைத்தனர். அந்த பணத்தை உரிய விசாரணைக்கு பின் கருவூலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.