தொப்பூரில், அடுத்தடுத்து 4 லாரிகள் கவிழ்ந்தன - 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தொப்பூரில் அடுத்தடுத்து 4 லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-03-16 17:50 GMT
நல்லம்பள்ளி,

கர்நாடகாவில் இருந்து கங்கேயத்திற்கு நெல் பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் வழியாக நேற்று முன்தினம் இரவு வந்தது. இந்த லாரியை ஓசூரை சேர்ந்த டிரைவர் காதர்கான் (வயது 60) ஓட்டி வந்தார். தொப்பூர் செக்போஸ்ட் அருகே வந்த போது பின்னால் வந்த ஒரு டேங்கர் லாரி நெல் பாரம் ஏற்றி வந்த லாரி மீது மோதியது. 

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த மேலும் 3 லாரிகளும் அடுத்தடுத்து மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர்கள் உள்பட 5 பேர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்