விழுப்புரம் மாவட்டத்தில் 3-வது நாளில் 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல்
விழுப்புரம் மாவட்டத்தில் 3-வது நாளில் 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனா்.
விழுப்புரம்,
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதியன்று தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் 2-ம் நாளான நேற்று முன்தினம் 25 வேட்பாளர்கள் மொத்தம் 43 மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து வேட்புமனு தாக்கலின் 3-வது நாளான நேற்று மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு சென்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலு, சுயேட்சை வேட்பாளர் ராமன் ஆகிய 2 பேரும், திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி மாவட்ட அமைப்பாளர் விஸ்வநாதனும், செஞ்சி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுகுமாருக்கு மாற்று வேட்பாளராக பச்சையப்பனும்,
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஆறுமுகமும், மயிலம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் தண்டபாணியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
திருக்கோவிலூர், வானூர் ஆகிய தொகுதிகளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மொத்தத்தில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று 6 வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுவரை 31 வேட்பாளர்கள் 49 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இன்றும் (புதன்கிழமை) 4-வது நாளாக வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.