தேனி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 492 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம்
தேனி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிக்காக 7 ஆயிரத்து 492 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேனி:
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை நடத்த முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 4 தொகுதிகளிலும் மொத்தம் 1,561 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளில் பணியில் ஈடுபட 7 ஆயிரத்து 492 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 155 மண்டல அலுவலர்களின் கீழ் அவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இந்த வாக்குச்சாவடி அலுவலர்களை தொகுதி வாரியாக கலக்கல் முறையில் தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேவையான எண்ணிக்கையில் பணியாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
இந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாலுகா அளவில் நடக்கிறது. வாக்குச்சாவடி நடைமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகளை கையாளும் விதம் மற்றும் வாக்குச்சாவடி மையத்தில் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.