நீலகிரியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதையடுத்து சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது.
இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை 3 தொகுதிகளிலும் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
ஊட்டி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் தடுப்புகள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 4 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.