ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: வடமாநில வாலிபர் பரிதாப சாவு; தம்பிக்கு தீவிர சிகிச்சை
ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வடமாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவருடைய தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஈரோடு
ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வடமாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவருடைய தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வாலிபர் சாவு
ஈரோடு அருகே உள்ள வேப்பம்பாளையம் பிரிவு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை ஈரோடு திண்டல் மலையில் இருந்து பெருந்துறை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது பெருந்துறையில் இருந்து வேப்பம்பாளையம் பிரிவு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டு இருந்தனர்.
அவர்கள் வேப்பம்பாளையம் பிரிவு ரோட்டை கடக்க முயன்ற போது எதிரில் வந்த காரும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்த 2 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மோட்டார்சைக்கிளில் பின்புறம் அமர்ந்திருந்தவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
அண்ணன்-தம்பி
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் உயிரிழந்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மெகாப்கான் (வயது 30) என்பதும், படுகாயம் அடைந்தது அவருடைய தம்பி அதாப்கான் (27) என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் 2 பேரும் ஈரோட்டில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.