திருக்குறுங்குடி பகுதியில் வாழைத்தார் அறுவடை பணிகள் தீவிரம்
திருக்குறுங்குடி பகுதியில் வாழைத்தார் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஏர்வாடி, மார்ச்:
திருக்குறுங்குடி பகுதியில் வாைழத்தார் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அறுவடை பணிகள் தீவிரம்
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிர் செய்யப்பட்டது. ஏத்தன், ரசகதலி, கதலி, செந்தொழுவன், நாடு உள்ளிட்ட ரகங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் வாழைத்தார் அறுவடை தொடங்கியது. தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சீசன் தொடங்கியபோது ஏத்தன் ரக வாழைத்தார் 1 கிலோ ரூ.21-க்கு விற்பனையானது. தற்போது விலை மேலும் குறைந்து 1 கிலோ ரூ.17-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.
விலை நிர்ணயம்
ஒரு வாழைக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் இருந்து, உரமிடுவது, மருந்து தெளிப்பது, கம்பு கொடுத்து பாதுகாப்பது வரை ரூ.200 வரை செலவு செய்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால் செலவழித்ததை விட மிகவும் குறைவாக ரூ.100 மட்டுமே கிடைப்பதால் விவசாயிகளுக்கு செலவழித்த ரூபாய் கூட கிடைக்காத நிலை நிலவுகிறது. இதையடுத்து அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே தமிழக அரசு வாழைத்தார்களுக்கு விலை நிர்ணயம் செய்து, நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், வாழைத்தார் சந்தை அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.