‘20 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும்’

தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என்று மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டியின்போது கூறினார்.

Update: 2021-03-15 18:27 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டமன்ற தொகுதியானது அ.தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று மாநில மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்கு வந்தார். பின்னர் ஊட்டியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த 13 நிர்வாகிகளிடம், தனியார் மண்டபம் ஒன்றில் தனித்தனியாக நேர்காணல் நடத்தினார். 

தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

20 தொகுதிகளிலும் வெற்றி

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- 
அ.தி.மு.க., பா.ஜனதா கட்சி கூட்டணி இடையே குழப்பம் எதுவும் இல்லை. 3 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று (அதாவது நேற்று) அல்லது நாளை (அதாவது இன்று) அறிவிக்கப்படுவார்கள்.

வருகிற 19-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்களை மாற்றுவது குறித்து வதந்தி பரவி வருகிறது. ஊட்டியில் பா.ஜ.க. வேட்பாளர்தான் போட்டியிடுவார். தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும். 
இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பு

இதற்கிடையில் அவர் வந்த ஹெலிகாப்டரில் ஏதேனும் பணம் உள்ளதா? என்று தேர்தல் அதிகாரிகள் உடமைகளை எடுத்து சோதனை செய்தனர். ஹெலிபேடு பகுதிக்கு வர 3 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

கூடுதலாக வாகனங்கள் வந்ததால் தேர்தல் அதிகாரிகள் அந்த வாகனங்களுக்கான செலவு வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்