கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி அ.தி.மு.க.வினா் 4-வது நாளாக போராட்டம்
கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி அ.தி.மு.க.வினா் 4-வது நாளாக போராட்டம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் செந்தில்குமாரை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி தலைவியுமான அழகுவேல்பாபுவை வேட்பாளராக அறிவிக்கக்கோரி அ.தி.மு.க.வினர் கடந்த 3 நாட்களாக மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து நேற்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது. இதையொட்டி கள்ளக்குறிச்சி நகர அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து நகர செயலாளர் பாபு தலைமையில் 300-க்கும் மேற்பட்ட கட்சியினர் பேரணியாக புறப்பட்டு 4 முனை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தற்போதைய வேட்பாளரை மாற்றிவிட்டு முன்னாள் எம்.எல்.ஏ.அழகுவேல்பாபுவை அறிவிக்க வேண்டும் என கட்சியினர் கோஷம் எழுப்பினார்கள். தொடர்ந்து அ.தி.மு.க.வினர் மறியலை கைவிட்டு அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு கட்சி அலுவலகத்தை சென்றடைந்தனர்.