காயல்பட்டினத்தில் அபூர்வ துஆ பிரார்த்தனை திரளானோர் பங்கேற்பு
காயல்பட்டினத்தில் அபூர்வ துஆ பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் அபூர்வ துஆ பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
அபூர்வ துஆ பிரார்த்தனை
காயல்பட்டினத்தில் உள்ள புகழ்பெற்ற மஜ்லிஸல் புகாரி ஷரீப் சபையின் 94-வது ஆண்டு விழா கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருக்குரான் ஓதப்பட்டு மார்க்க சொற்பொழிவு, சன்மார்க்க கூட்டம், கலைநிகழ்ச்சி போன்றவை நடந்தது.
விழாவின் சிகர நாளான நேற்று காலையில் அபூர்வ துஆ பிரார்த்தனை நடைபெற்றது. இதன் தமிழ் மொழி பெயர்ப்பை துபாய் நாட்டின் அல்குரைர் பள்ளிவாசல் இமாம் எம்.எம்.சுலைமான் லெப்பை ஆலிம் ஓதி மஜ்லிஸ் நிறைவு செய்தார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஒழிய வேண்டியும், அமைதி நிலவவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
திரளானவர்கள் பங்கேற்பு
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான ஆண்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா நிறைவடைந்ததும் அபூர்வ துஆ பிரார்த்தனை நடத்திய எம்.எம்.சுலைமான் லெப்பைக்கு புகாரி ஷரீப் சபையின் சன்மார்க்க மாணவர்கள் மாலை அணிவித்து இஸ்லாமிய பாடல்கள் பாடியவாறு ஊர்வலமாக அவரது இல்லத்துக்கு அழைத்து சென்றனர்.
விழாவில் திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கடையநல்லூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகம்மது அபுபக்கர், திருச்செந்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், வாவு வஜீஹா கல்லூரி தலைவர் வாவு செய்யது அப்துர் ரஹ்மான், செயலாளர் வாவு முஹ்தஸிம் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.