விராலிமலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவு திரட்டினார்; உங்கள் வீட்டு பிள்ளையாக இருப்பேன் என்று பேச்சு

விராலிமலையில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர் உங்கள் வீட்டு பிள்ளையாக இருப்பேன் என்று பேசினார்.

Update: 2021-03-15 02:30 GMT
3-வது நாளாக ஆதரவு திரட்டினார்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 3-வது முறையாக அமைச்சர் விஜயபாஸ்கர் நிறுத்தப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் 3-வது நாளான நேற்று விராலிமலை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்குடியில் பிரசாரத்தை தொடங்கினார்.

பின்னர் தாளப்பட்டி, விட்டமாபட்டி, சாரணக்குடி, பொருவாய், கல்லுப்பட்டி, பூதகுடி, இராசநாயக்கன்பட்டி, இ.மேட்டுப்பட்டி, கல்குளத்துப்பட்டி, அம்பாள் நகர், சமத்துவபுரம், குறிச்சிப்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, தேத்தாம்பட்டி, வடுகப்பட்டி, மேப்பூதகுடி, மே.குளவாய்ப்பட்டி, சித்தகுடிப்பட்டி, மணமேட்டுப்பட்டி, விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

உங்கள் வீட்டுப்பிள்ளை

கல்குடி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

என்னை எப்போதும் கை தூக்கி விடக்கூடிய பகுதி இந்த விராலிமலை மேற்கு ஒன்றிய பகுதி தான். என்னை அமைச்சராகவோ, எம்.எல்.ஏ.வாகவோ பார்க்காதீர்கள். உங்கள் வீட்டில் உள்ள ஒருவராக பாருங்கள். நான் உங்கள் வீட்டுப்பிள்ளை. வெயிலை சமாளிக்க சூரியனை எதிர்த்து நிற்கிறோம். அதேபோல, தேர்தலிலும் சூரியனை எதிர்த்து நிற்கிறோம். தேர்தல் வந்துவிட்டது. இனி ஊருக்குள் 10 கார் வரும், போகும். ஆனால் தேர்தல் முடிந்ததும் அந்த கார்கள் வருவது நின்றுவிடும.் ஆனால், விஜயபாஸ்கர் மக்களின் அடிப்படை தேவைகளை போக்க எப்போதும் உங்களுடன் இருப்பார். உங்கள் வீட்டுப்பிள்ளையாக எப்போதும் உங்களுடனே இருப்பேன்.ஒருவர் ஓட்டு வாங்கி கரூருக்கு சென்றவர் 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எட்டிக்கூட பார்க்கவில்லை.

மோட்டார் சைக்கிளில் வந்தேன்
கொரோனா கால கட்டத்தில், பொதுமக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்தபோது யாராவது நலமாக இருக்கிறீர்களா என கேட்டிருப்பார்களா?. ஆனால் நான் கிராமம், கிராமமாக மோட்டார் சைக்கிளில் சென்று அவர்களுக்கு உணவு, மருந்து-மாத்திரைகள் வழங்கினேன். கொரோனா கவச உடையை அணிந்து கொண்டு ஆஸ்பத்திரியில் மருத்துவ சேவையாற்றியுள்ளேன். பெண்கள் பயன்பெறும் வகையில் தாலிக்கு தங்கம், கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி, அம்மா பரிசு பெட்டகம், வேலைக்கு செல்லும் பயன்பெறும் வகையில் அம்மா இருசக்கர வாகனம் வாங்க நிதி உதவி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

பெண்கள் திட்டங்கள்
மேலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,500 வழங்கும் திட்டம், ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளன. ஆகவே, எனக்கு இரட்டை இலை சின்னத்திலே வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விட்டமாபட்டியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு செல்லும்போது அப்பகுதியில் உள்ள வயலில் பெண்கள் நாற்று நட்டு கொண்டிருந்தனர். அவர்களை கண்டவுடன் காரை நிறுத்திய அமைச்சர் விஜயபாஸ்கர் வயலில் இறங்கி அந்த பெண்களோடு சேர்ந்து சிறிதுநேரம் நாற்று நட்டார். அப்பெண்கள் மகிழ்ச்சியடைந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்