சேலம் செவ்வாய்பேட்டையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு
கொரோனா தடுப்பு விழிப்புணர்வு
சேலம்:
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், சேலம் மாநகராட்சி செவ்வாய்பேட்டை லாங்லி ரோடு, தேர் வீதி, ராமலிங்கம் நாளங்காடி (பால் மார்க்கெட்) பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு முக கவசம் அணியாமல் வந்த சிறு வியாபாரிகள், பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி அதன் அவசியம் குறித்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் அறிவுரை வழங்கினார். மேலும், முக கவசம் அணியாத சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை எச்சரிக்கை செய்ததுடன் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் குறைந்தபட்ச அபராதமும் விதிக்கப்பட்டது.
சேலம் மாநகரில் கொரோனா நோய் தொற்று மீண்டும் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது எனவும், கடந்த 5 நாட்களில் முக கவசம் அணியாத 280 பேருக்கு தலா ரூ.200 வீதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 89 சிறு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.500 வீதமும், ஒரு வணிக நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன், செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகம், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ், பிரகாஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.