100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-03-14 20:49 GMT
மணப்பாறை,

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மணப்பாறை, துறையூர், புள்ளம்பாடியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை நகராட்சி பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மணப்பாறை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி லெஜபதிராஜ் தலைமை தாங்கினார்.
இதையொட்டி பயணியர் விடுதி முன்பு விழிப்புணர்வு கோலம் வரையப்பட்டிருந்தது. மேலும் மாதிரி வாக்குப்பதிவு எந்திரம் மூலம் எவ்வாறு வாக்களிப்பது, வாக்களித்த சின்னத்தை எப்படி உறுதி செய்வது என்று செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. 

துறையூர்

இதுபோல் துறையூர் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கிராமம், கிராமமாக மாதிரி வாக்குப்பதிவு எந்திரம் மூலம் செயல்முறை விளக்கம் நடைபெற்றது. சித்திரை பட்டி, சிங்களாந்தபுரம், வெங்கடேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி செல்வம் தலைமை தாங்கினார்.

புள்ளம்பாடி

இதுபோல் லால்குடி தொகுதிக்கு உட்பட்ட புள்ளம்பாடி பேரூராட்சியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு லால்குடி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சித்ரா தலைமை தாங்கினார். புள்ளம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை ஒருங்கிணைப்பாளர் பிரகதீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்தியநாதன் கலந்து கொண்டு, பொதுமக்கள் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து பெண்களுக்கு கோலப்போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும் செய்திகள்