குளித்தலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
குளித்தலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
குளித்தலை:
வாகன சோதனை
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையொட்டி கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் நிலையான கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படை குழுவினர் தினந்தோறும் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி குளித்தலை பகுதியில் இதுவரை நடந்த வாகன சோதனையில் சுமார் ரூ.4 லட்சத்து 27 ஆயிரம் கடந்த சில நாட்களில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களை தவிர மாவட்ட எல்லை பகுதியான சுங்ககேட் - முசிறி செல்லும் சாலை, மருதூர் போலீஸ் சோதனை சாவடி ஆகிய இடங்களில் குளித்தலை போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசாரணை
அதன்படி நேற்று முசிறி செல்லும் சாலையில் குளித்தலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்கள் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் பணம், அரசியல் கட்சி தலைவர்கள் படம், பெயர், இடம் பெற்ற பொருட்கள் உள்ளதா? என்பது குறித்து தீவிர சோதனை செய்தும், அந்த வண்டி எண்ணை குறித்துக்கொண்டு விசாரணை செய்து அனுப்பி வைத்தனர்.