வாக்கு எண்ணும் மையத்திற்காக பெரம்பலூர்- வேப்பூர் அரசு கலை கல்லூரிகளில் முன்னேற்பாடுகள் தீவிரம்
வாக்கு எண்ணும் மையத்திற்காக பெரம்பலூர் மற்றும் வேப்பூர் அரசு கலை கல்லூரிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
பெரம்பலூர்:
வாக்கு எண்ணிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர்(தனி), குன்னம் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும், பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் எண்ணப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அக்கல்லூரியின் தாளாளரின் மகன் தேர்தலில் போட்டியிடுவதால், அக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறாது என்று அரசு அதிகாரிகளால் கூறப்படுகிறது.
மேலும் இது குறித்தும், பெரம்பலூர் தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையத்தினை குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும், குன்னம் தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையத்தினை வேப்பூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரால் கருத்துரு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னேற்பாடுகள்
இந்த நிலையில் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், வேப்பூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையம் ஏற்படுத்துவதற்கு முன்னெற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.