செங்கல் தயாரிக்கும் தொழில் பாதிப்பு
நாகை மாவட்டத்தில் மண் கிடைக்காததால் செங்கல் தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.மழை காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மண் கிடைக்காததால் செங்கல் தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.மழை காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல் தயாரிக்கும் பணி
நாகை மாவட்டம் சங்கமங்கலம், வடவூர் நிர்த்தனமங்கலம், ஒரத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் செங்கல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோடைக்காலம் நெருங்குவதையொட்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயில் அதிகமாக இருக்கும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களை கணக்கில் கொண்டு அதிகளவில் செங்கல் தயாரிக்கப்படும். இந்த கோடைக்காலமே செங்கல் தயாரிக்க ஏற்றகாலமாகும்.
தற்போது நாகை மாவட்டத்தில் செங்கல் தயாரிக்க மண் கிடைக்கவில்லை. இதனால் செங்கல் தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தொழிலை கைவிட்டு விட்டு வேறு வேலைக்கு சென்று விட்டனர்.
இதுகுறித்து வடவூர் பகுதியை சேர்ந்த செங்கல் தயாரிக்கும் தொழிலாளிகள் கூறியதாவது:-
மேட்டூர் அணை
ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை செங்கல் தயாரிப்புக்கு ஏற்ற காலமாக உள்ளது. மேட்டூர் அணையில இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கு வருவதற்குள் செங்கல் தயாரிக்கும் பணி முடிவடைந்துவிடும். எங்கள் பகுதியை சுற்றி 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.
இதில் 1000-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் தயார் செய்யப்படும் செங்கல்கள், நாகை வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மண் கிடைக்கவில்லை
புழுதி மண்ணோடு ஆற்றில் இருந்து எடுக்கக்கூடிய சவட்டு மண்ணை சேர்த்து செங்கல் தயாரிக்கப்படுகிறது. குளைத்த மண்ணை அச்சுகளில் போட்டு கல் அறுக்க தொடங்குவோம். பின்னர் நன்கு காய்ந்த கற்களை சூலையில் அடுக்கி வைத்து தீ மூட்டி வேக வைப்போம்.தொடர்ந்து சரியான பக்குவத்தில் வெந்த செங்கற்களை விற்பனைக்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அனுப்பி வைப்போம். தற்போது செங்கல் தயாரிக்க மண் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டுகளில் சேமித்து வைத்து இருந்த மண்ணை தான் தற்போது செங்கல் தயாரிக்க பயன்படுத்தி வருகிறோம். புதிதாக மண் எடுக்க வாய்ப்பு இல்லாததால், செங்கல் தொழில் முடங்கியுள்ளது. இதனால் விலையும் அதிகரித்துள்ளது.
வேலையின்றி தவிப்பு
கடந்த ஆண்டு ஒரு செங்கல் ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.6-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தொடர்ந்து விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்தத் தொழிலை விட்டால் வேறு தொழில் தெரியாது. எனவே செங்கல் தயாரிப்பதற்கு ஏற்ற மண் குவாரியை அரசு தொடங்க வேண்டும். அப்போதுதான் வேலையின்றி தவித்து வரும் எங்களைப்போன்ற தொழிலாளர்களுக்கு பிழைப்பதற்கு வழி கிடைக்கும்.
தற்போது , ஏப்ரல், மே போன்ற வெயில் காலங்களில் கோடை மழை பெய்கிறது. அப்போது பெரிய அளவிலான தார்ப்பாய்களை பயன்படுத்தி வெளியில் காயவைத்த செங்கலை மூடி வைப்போம். இருந்தும் மழை நீரில் செங்கல்கள் கரைந்து விடும். மழை காலங்களில் செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.